×

அரசு மருத்துவமனை, ஊழியர்களை பாதுகாக்க அவசர சட்டம் கேரளாவில் டாக்டர்களை தாக்கினால் 7 வருடம் சிறை: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

திருவனந்தபுரம்: கேரளாவில் அரசு மருத்துவமனை மற்றும் ஊழியர்களை பாதுகாக்கும் வகையில் அவசர சட்டத்தை கொண்டு வர அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி டாக்டர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களை தாக்கினால் 7 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும். கேரளாவில் அரசு மருத்துவமனை மற்றும் டாக்டர்கள், ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்துவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் கொல்லம் அருகே கொட்டாரக்கரை அரசு மருத்துவமனையில் பெண் டாக்டர் வந்தனா தாஸ் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களை பாதுகாக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று டாக்டர்கள் சங்கத்தினர் கேரள அரசை வலியுறுத்தினர். இந்நிலையில் அரசு மருத்துவமனை டாக்டர்களை பாதுகாக்கும் வகையில் அவசர சட்டத்தை கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி டாக்டர்கள் மற்றும் ஊழியர்களைத் தாக்கினால் குறைந்தது 6 மாதங்கள் முதல் 7 வருடங்கள் வரை சிறையும், ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

மருத்துவமனைகளில் வன்முறையில் ஈடுபடுவதோ, ஈடுபட முயற்சிப்பதோ அல்லது வன்முறையை தூண்டவோ செய்தால் 6 மாதம் முதல் 5 வருடங்கள் வரை சிறையும், ரூ.50 ஆயிரம் முதல் ரூ. 5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். மருத்துவமனை ஊழியர்களை திட்டவோ, அவமானப்படுத்தவோ செய்தால் கூட தண்டனை கிடைக்கும். நர்சிங் கல்லூரிகள் உள்பட அனைத்து மருத்துவ கல்வி நிறுவனங்களில் உள்ளவர்களுக்கும் இந்த பாதுகாப்பு கிடைக்கும்.

The post அரசு மருத்துவமனை, ஊழியர்களை பாதுகாக்க அவசர சட்டம் கேரளாவில் டாக்டர்களை தாக்கினால் 7 வருடம் சிறை: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Cabinet ,Kerala ,Dinakaran ,
× RELATED பெண்ணின் பலாத்கார வீடியோவை...